Sunday, April 29, 2012

இரவில் தனியே தூங்கலாமா?- ஓர் ஆய்வு



ஒருவர் தனியே இரவில் தங்குவது கூடுமா? இல்லையா என்பதை நாம் முடிவு செய்வதாயின் அதற்கு அல்குர்ஆனிலிருந்தோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்தோ ஆதாரங்கள் இருக்க வேண்டும் அவ்வாறு ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் தனியே இரவில் தங்குவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியமல்ல என்ற முடிவுக்கு நாம் வரலாம்
இரவில் தனியே தூங்கக் கூடாது என்ற கருத்தில் முஸ்னத் அஹ்மதில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது
عن ابن عمر ، " أن النبي صلى الله عليه وسلم نهى عن الوحدة ، أن يبيت الرجل وحده أو يسافر وحده (مسند احمد)

நபி(ஸல்) அவர்கள் தனிமையில் இருப்பதை தடை செய்தார்கள் ஒருவர் தனியே இரவில் தங்குவதையும் தனியே பிரயாணம் மேற்கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு உமர்(ரழி)
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்
இலக்கம்-5494
மேற்குறித்த செய்தியில் ஆஸிம் என்பவர் இடம் பெறுகிறார் அவரிடமிருந்து சுமார் ஏழு மாணவர்கள் ஹதீஸை அறிவிப்பு செய்கின்றனர் அவர்களில் அப்துல் வாஹித் என்பவர் மாத்திரமே இரவில் தனியே தங்குவது தொடர்பான அம்சத்தை அறிவிப்பு செய்கின்றார் மேற்குறித்த அறிவிப்பிலும் அவரே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
இது போக ஆஸிமுடைய ஏனைய மாணவர்களின் அறிவிப்புக்கள் பின்வரும் ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளன
முதல் மாணவர்: வகீஉ: இவரது அறிவிப்பு இப்னு மாஜா என்ற நூலில்(3766) இடம் பெற்றுள்ளது அதில் இரவில் தனியே தூங்குவது தொடர்பான விடயத்தை இவர் அறிவிக்கவில்லை
இரண்டாவது மாணவர்: ஸுப்யான் இப்னு உயைனா
இவரது அறிவிப்பு திர்மிதியில்(1639) இடம் பெற்றுள்ளது இரவில் தனியே தூங்குவது தொடர்பான விடயத்தை இவர் அறிவிக்கவில்லை
மூன்றாவது மாணவர்: பழ்லு இப்னு தகீன்
இவரது அறிவிப்பு ஸுனனுல் குப்ரா என்ற இமாம் பைஹகீ அவர்களது நூலில் இடம் பெற்றுள்ளது அதில் இரவில் தனியே தூங்குவது தொடர்பான விடயத்தை இவர் அறிவிக்கவில்லை
நான்காவது மாணவர்: முஹம்மதிப்னு  உபைத்: இவரது அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளது அதில் இரவில் தனியே தூங்குவது தொடர்பான விடயத்தை இவர் அறிவிக்கவில்லை
ஐந்தாவது மாணவர்: ஹாஷிம் இவரது அறிவிப்பு முஸ்னத் அஹ்மதிலே இடம் பெற்றுள்ளது அதில் இரவில் தனியே தூங்குவது தொடர்பான விடயத்தை இவர் அறிவிக்கவில்லை
ஆறாவது மாணவர்: ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்: இவரது அறிவிப்பு ஷுஅபுல் ஈமான் எனும் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளது அதில் இரவில் தனியே தூங்குவது தொடர்பான விடயத்தை இவர் அறிவிக்கவில்லை
எனவே ஒருவரிடமிருந்து கேட்ட பல ஏழு மாணவர்களில் ஒரே ஒரு மாணவர் மாத்திரமே ஒரு அம்சத்தை அறிவிக்கிறாரெனில் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செய்தியாகும் இதற்கு ஹதீஸ்கலையில் ஷாத் என்று கூறப்படும்

ஆஸிமுடைய மேற்குறித்த மாணவர்களின் அறிவிப்புக்களை நுணுக்கமாக நாம் நோக்கினால் ஒரு உண்மை புலப்படுகின்றது அதாவது தனிமை என்று நபி(ஸல்) அவர்கள் இங்கு பயன்படுத்தியிருப்பது தனிமையில் பிரயாணம் செய்வதைத்தான் குறிக்கின்றது ஏனெனில் அப்துல் வாஹித் என்பவரைத் தவிர அனைவருமே தனிமையில் பிரயாணம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்றே அறிவிப்பு செய்கின்றனர் தனிமையில் தங்குவதை குறிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம் அது மாத்திரமல்லாமல் தனிமையில் பிரயாணம் செய்யக் கூடாது என்பதை வேறொரு ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது

سنن أبي داود  - كتاب الجهاد
 باب في الرجل يسافر وحده - حديث:‏2254‏
 حدثنا عبد الله بن مسلمة القعنبي ، عن مالك ، عن عبد الرحمن بن حرملة ، عن عمرو بن شعيب ، عن أبيه ، عن جده ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " الراكب شيطان ، والراكبان شيطانان ، والثلاثة ركب
(தனிமையில்) பிரயாணம் செய்யும் ஒருவன் ஷைத்தான் ஆவான் பிரயாணம் செய்யும் இருவர் இரு ஷைத்தான்கள் ஆவர் மூன்று பேர் பிரயாணக் கூட்டத்தினர் ஆவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ்(ரழி)
ஆதாரம்: அபூதாவுத்
இலக்கம்-2609
இரவில் தனியே தூங்குதல் கூடாது என்ற கருத்தில் மற்றுமொரு செய்தி:

المعجم الأوسط للطبراني  - باب الألف
 من اسمه أحمد - حديث:‏2090‏
 حدثنا أحمد بن زهير قال : نا إسحاق بن وهب العلاف الواسطي قال : نا محمد بن القاسم الأسدي قال : نا زهير ، عن أبي الزبير ، عن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لو يعلم الناس ما في الوحدة ما سار راكب بليل أبدا ، ولا نام رجل في بيت وحده "
:
தனிமையில் உள்ள விபரீதத்தை மனிதர்கள் அறிவார்களாயின் இரவில் தனிமையாக எந்த மனிதனும் பிரயாணம் செய்ய மாட்டான் மேலும் தனிமையில் எந்த மனிதனும் ஒரு வீட்டில் தங்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி)
ஆதாரம்: முஃஜமுல் அவ்ஸத்
இலக்கம்:2090
மேற்குறித்த செய்தியில் தனிமையில் பிரயாணம் செய்வது சம்பந்தமாக கூறப்பட்ட அம்சம் ஆதாரபூர்வமானது அதை ஏற்கனவே கண்டோம் எனினும் தனிமையில் இரவில் தங்கும் அம்சம் இதில் பலவீனமானது காரணம் அதில் இடம் பெறும் முஹம்மதிப்னுல் காஸிம் என்ற அறிவிப்பாளர் ஏற்றுக் கொள்ள முடியாதவர் ஆவார்
அவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்
இமாம் நஸாயீ: இவர் நம்பகமற்றவர் இமாம் அஹ்மத் இவரை பொய்யர் என விமர்சித்துள்ளார்
இமாம்  அபூஹாதிம்: இவர் பலமற்றவர்
இமாம் அபூதாவுத்: இவர் நம்பகமற்றவர் இவர் அறிவிக்கும் செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்
மேற்குறித்த இமாம்களது விமர்சனங்கள் தஹ்தீபுல் கமால் என்ற நூலில் இடம் பெற்றுள்ளன
எனவே இரவில் ஒருவர் தனியே தூங்குவது தொடர்பாக எந்தவொரு ஹதீஸும் ஆதாரபூர்வமானது கிடையாது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் இது போக இரவில் தனியே தூங்குவது தொடர்பாக மற்றுமொரு செய்தியும் ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றது அதன் விளக்கத்தையும் சற்று நோக்குவோம்

جامع معمر بن راشد  - الصحابة في السفر
 حديث:‏202‏
 أخبرنا عبد الرزاق ، عن معمر ، عن عاصم بن سليمان ، وغيره ، عن عمر بن الخطاب ، قال : " لا يسافرن رجل وحده ، ولا ينامن في بيت وحده "
ஒரு மனிதர் தனியே பிரயாணம் செய்ய வேண்டாம் மேலும் ஒரு வீட்டில் தனியே தூங்கவும் வேண்டாம்
அறிவிப்பவர்:உமர்(ரழி)
ஆதாரம்: ஜாமிஉ மஃமர்
மேற்குறித்த செய்தி உமர்(ரழி) அவர்களது சொந்தக்கருத்தாகும் எனவே இதில் எவ்வித ஆதாரமும் கிடையாது
இரவில் ஒருவர் தனியே தூங்கலாம் என்ற அனுமதி எமக்கிருக்கும் நிலையில் இங்கு மற்றுமொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது ஒருவர் தனியே தூங்கும் போது ஆபத்து ஏற்பட்டால் கூட அடுத்தவரை உதவிக்கு அழைப்பது சில வேளை முடியாமல் போய் விடும் வம்பை நாமே ஏற்படுத்திக் கொண்டால் அது மார்க்கத்தின் பார்வையில் குற்றமாகும் இதையும் நாம் கவனத்தில் கொண்டு முடிந்தளவு தனிமையில் தூங்குவதை நாம் தவிர்க்க முயற்சிக்க வேண்டும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தான் கெட்ட சிந்தனைகளைக் கூட ஏற்படுத்த இடம்பாடு உள்ளது இதையும் நாம் கவனத்தில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும்