Sunday, August 21, 2016

இஷாவை பிற்படுத்தித் தொழுவது சம்பந்தமான விளக்கம்


بسم الله الرحمن الرحيم

இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுவது நபி(ஸல்) அவர்கள் அதிகமாக மேற்கொண்ட ஒரு காரியமே ஆகும் ஒரே ஒரு தடவைதான் நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுதார்கள் என்ற வாதம் தவறானதாகும் அதற்கு எவ்வித ஆதாரமும் மார்க்கத்தில் கிடையாது.ஒரு வாதத்திற்கு நபி(ஸல்) அவர்கள் இஷாவை ஒரு தடவை பிற்படுத்தித் தொழுதார்கள் என்று மட்டும் இடம் பெற்றால் கூட அதுவும் இஷாவை தொடர்ந்து பிற்படுத்துவதற்குரிய ஆதாரம்தான். நபி(ஸல்) அவர்களின் அனைத்து வணக்க வழிபாடுகளும் பல முறை இடம் பெற்றால்தான் பின்பற்றுவேன் என்று ஒருவர் வாதிட்டால் அது பல விபரீத முடிவுகளையே ஏற்படுத்தும் உதாரணமாக
ஒருவர் நான்கு உம்ராக்களுக்கு மேல் பல உம்ராக்கள் செய்ய முடியாது காரணம் நபி(ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள்தான் செய்துள்ளார்கள்2-ஒருவர் தனது வாழ்க்கையில் இரு முறையோ அல்லது அதற்கு மேல் பல முறைகளோ சூரிய கிரகணத் தொழுகையை தொழ முடியாது காரணம் நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஒரே ஒரு தடவைதான் நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை தொழுததாக ஹதீஸ் வந்துள்ளதுஇப்படி நபி(ஸல்) அவர்கள் செய்த வணக்கங்கள் அனைத்தையும் அவர்கள் செய்த எண்ணிக்கைக்கு கூடுதலாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்எனவேதான் நபி(ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை செய்தால் அதை நாம் தொடர்ந்து செய்து வருவது மார்க்கத்தில் குற்றம் கிடையாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்இஷாவை பிற்படுத்தித் தொழுவது நபி(ஸல்) அவர்களின் வழக்கம் என்பதற்கும் அதுவே அவர்களின் விருப்பத்திற்குரிய செயல் என்பதற்கும் பல ஆதாரங்களைத் தர முடியும்.
முதலாவது ஆதாரம்:

"நாங்கள் அபூபர்ஸாவிடம் வந்தோம் நபி(ஸல்) அவர்கள் கடமையான தொழுகையை எப்படித் தெழுபவர்களாக இருந்தார்கள் என்பதை எங்களுக்கு அறிவிப்பீராக என்று எனது தந்தை அபூபர்ஸாவிடம் கேட்டார்
அதற்கு அவர் மக்கள் அதமா என அழைக்கும் இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுவது நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பத்திற்குரியதாக இருந்தது இஷாவிற்கு முன் தூங்குவதையும் அதற்குப் பிறகு பேசுவதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தார்கள் அறிவிப்பவர்:அபூபர்ஸா(ரழி, ஆதாரம்:தஃழீமு கத்ரிஸ் ஸலாஹ், இலக்கம்:97
இதே கருத்தில் ஸஹீஹுல் புஹாரியில் 571 வது இலக்கத்திலும் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது
பொதுவாக மார்க்கத்தில் ஒரு காரியம் நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பத்திற்குரியதாக இருந்தது என்று இடம் பெற்றால் அதை நாமும் அதிகமதிகம் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் நபியவர்களுக்கு இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுவது விருப்பத்திற்குரிய காரியமாக இருந்துள்ளது என்பது ஆதாரபூர்வமாக இருக்கும் போது நாம் ஏன் அதை செய்யாமல் இருக்க வேண்டும்? அமல்களில் நபி(ஸல்) அவர்களுக்கு அதிக விருப்பமானது அதை தொடர்ந்து செய்து வருவதுதான் என அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரபூர்வமான செய்தி இப்னு ஹிப்பான் என்ற கிரந்தத்தில் 2444 வது இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஷாவை பிற்படுத்தித் தொழுவது நபி(ஸல்) அவர்களது விருப்பத்திற்குரிய செயலாக இருப்பதினால் ஆயிஷா(ரழி) அவர்களின் கூற்றை வைத்து நோக்கும் போது கூட நபி(ஸல்) அவர்கள் இஷாவை நிச்சயம் பிற்படுத்தித் தொழுவதை தொடர்ந்து செய்திருப்பார்கள் என்பதை சாதாரணமாகவே விளங்க முடிகின்றது
இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுவது நல்ல வரவேற்கத்தக்க அம்சம் என்பதற்கு இந்த ஒரு ஹதீஸே போதுமானதாகும்
இரண்டாவது ஆதாரம்:

எனது சமுதாயத்தினருக்கு சிரமம் இல்லையெனில் ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் செய்யுமாரும் இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுமாரும் கட்டளையிட்டிருப்பேன் அறிவிப்பவர்: அபூஹுரைறா(ரழி, ஆதாரம்அபூதாவுத், இலக்கம்:46

மேற்குறித்த ஹதீஸ் இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுவது எந்தளவு வரவேற்கத்தக்க அம்சம் என்பதை உணர்த்தக் கூடியதாகவுள்ளது மிஸ்வாக் செய்வது நபி(ஸல்) அவர்களுக்கு அதிக விருப்பத்திற்குரிய ஒரு அம்சம் என்பது சகலருக்கும் தெரியும் அதே போன்றுதான் இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுவதும் நபி(ஸல்) அவர்களுக்கு அதிக விருப்பத்திற்குரியதாக இருந்துள்ளது அதிக விருப்பத்திற்குரிய காரியமாக இருந்துள்ளபடியால்தான் "எனது சமுதாயத்திற்கு சிரமம் மாத்திரம் இல்லையெனில் பிற்படுத்தித் தொழுவதை கடமையாக்கிருப்பேன்" என்பதை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள் இதனையும் நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்
கேள்வி-2:வாழ்நாள் பூராக நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகையை பிற்படுத்தித் தான் தொழுது வந்துள்ளார்களா?
பதில்: உண்மையில் இது சம்பந்தமாக ஹதீஸ்களை ஆராய்ச்சி செய்யும் போது நபி(ஸல்) அவர்கள் பெரும்பாலும் இஷா தொழுகையை பிற்படுத்தியே தொழுதுவந்துள்ளார்கள் என்பதை அவதானிக்கலாம் அது அவர்களின் கூடுதல் நடடிவடிக்கையாகவுள்ளது
பிந்திய இஷாவை நபி(ஸல்) அவர்கள் பிற்படுத்தித் தொழுபவர்களாக
வே இருந்தார்கள் அறிவிப்பவர்:ஜாபிர்(ரழி), ஆதாரம்இப்னு ஹிப்பான், இலக்கம்:1546

முஸ்லிம் என்ற கிரந்தத்தில் 1128 வது இலக்கத்திலும் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது
பிற்படுத்தித் தொழுபவர்களாக இருந்துள்ளார்கள் என்பதிலிருந்து இது நபி(ஸல்) அவர்கள் ஒரு தடவை செய்யவில்லை அவர்களது அதிக வழக்கமே இஷாவை பிற்படுத்தித் தொழுவதுதான் என்பதை தெளிவாகவே உணரலாம். இந்த ஹதீஸை அறியாத சிலர் இஷாவை நபி(ஸல்) அவர்கள் ஒரு தடவைதான் பிற்படுத்தித் தொழுதுள்ளார்கள் என்று கூறுகின்றனர் ஆனால் அது தவறான முடிவாகும்
ஏனெனில் ஜாபிர்(ரழி) அவர்களின் அறிவிக்கும் வார்த்தையை கவனிக்கும் போது பிற்படுத்தித் தொழுபவர்களாக இருந்துள்ளார்கள் என்று அறிவிக்கிறார் இது தொடராக ஒரு காரியத்தை செய்து வருவதற்கே சொல்லப்படும் என்பதை சிந்திக்கும் போது புரிந்து கொள்ளலாம்.
கேள்வி:3- நபி(ஸல்) அவர்கள் இஷாவை ஆரம்ப நேரத்தில் தொழுதுள்ளார்களா?
பதில்: நபி(ஸல்) அவர்கள் இஷாவை உரிய நேரத்தில் அறவே தொழவில்லை என்று நாம் கூற மாட்டோம் ஆரம்ப நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். எனினும் நபி(ஸல்) அவர்களது பெரும்பாலான நடவடிக்கை இஷாவை பிற்படுத்தித் தொழுவதாகவே அமையப் பெற்றுள்ளது. பின்வரும் ஹதீஸ் அதை சுட்டிக்காட்டுகின்றது

நபி(ஸல்) அவர்கள் இஷாவை சில நேரங்களில் முந்தியும் வேறு சில நேரங்களில் பிந்தியும் (சூழ்நிலைக்கு தக்கவாறு தொழுவார்கள் மக்கள் (முன்நேரத்திலேயே) கூடியிருப்பதைக் கண்டால் ஆரம்ப நேரத்திலேயே தொழுதுவிடுவார்கள் மக்கள் தாமதமாக வருவதைக்  கண்டால் தாமதப்படுத்துவார்கள் அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி, ஆதாரம்:முஸ்லிம், இலக்கம்:1135

சில நேரங்களில் பிற்படுத்தியும் சில நேரங்களில் முற்படுத்தியும் என்று இடம் பெற்றதிலிருந்தே நபி(ஸல்) அவர்கள் இஷாவை ஒரு தடவைதான் பிற்படுத்தித் தொழுதார்கள் என்ற வாதம் அடியோடு அடிபட்டுப் போகின்றது
கேள்வி:3-எதுவரை நபி(ஸல்) அவர்கள் இஷாவை பிற்படுத்துவார்கள்?
பதில்: நபி(ஸல்) அவர்கள் இஷாவை இரவின் அரைவாசி வரை பிற்படுத்தித் தொழுபவர்களாக இருந்துள்ளார்கள்

நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகையை பாதி இரவு வரை பிற்படுத்தினார்கள் பின்பு தொழுது விட்டு உறங்கி விட்டார்கள் அறிவிப்பவர்அனஸ்(ரழி), ஆதாரம்:புஹாரீ, இலக்கம்:572

பாதி இரவென்பது இரவில் சுமார் பனிரெண்டு மணி நேர அளவைக் குறிக்கும் அந்த நேரத்தை அடையும் வரை நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகையை பிற்படுத்தித் தொழுதுள்ளார்கள்
எனவே இஷா தொழுகையை பிற்படுத்தி தொழுவதுதான் நபி(ஸல்) அவர்களின் அதிகமான வழக்கமாகவும் அவர்களுக்கு விருப்பத்திற்குரியதாகவும் இருந்துள்ளது நபி(ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவைதான் இஷாவை பிற்படுத்தித் தொழுதார்கள் என்ற வாதம் மிக மிக தவறானதாகும் என்பதே ஆய்வு செய்யுமிடத்து கண்டு கொள்ளும் உண்மையாகும்

My Web

இன்ஷா அல்லாஹ் எனது இணையதளம் சில மாற்றங்களுடன் இயங்கும் என்பதை அறியத் தருகின்றேன்.